எங்களுக்கே தண்ணீர் இல்லை - கைவிரித்த கர்நாடக CM சித்தராமையா
இந்தாண்டு மழை குறைவாகவே பெய்துள்ளதால், தங்களுக்கு நீர் குறைவாக இருப்பதாக காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்
தமிழகத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் கோரிக்கை வைத்திருந்தார்.
எதிர்க்கட்சிகளும் இதில் ஆளும் தமிழக அரசுக்கு நெருக்கடிகளை கொடுத்து வரும் நிலையில், தற்போது கர்நாடக அரசு தமிழகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் ஏன் தமிழகத்திற்கு போதுமான அளவில் நீர் திறந்து விடவில்லை என கர்நாடக ஆளும் அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
கைவிரத்த கர்நாடக CM
தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சில மாதங்கள் முன்பு தான், சித்தராமையா பதவியேற்று கொண்டார். இந்நிலையில், காவிரி நீர் விவகாரம் இன்று பேசியுள்ள அவர், ”கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை” என பேசியுள்ளார்.
தற்போது சித்தராமையாவின் விளக்கத்தை தமிழக அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.