செல்போனில் முழ்கிய தங்கச்சியை அடித்துக் கொன்ற கொடூர அண்ணன்
முழு நேரமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரை சேர்ந்த கார்த்தி என்பவர் கட்டடி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் கார்த்தியின் தங்கையான 16 வயது சிறுமி படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவரது குரல்வளை நெறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பழனி நகர காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்த போலீஸார் சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 16 வயது சிறுமியின் பெரியம்மா பையன் அவரை குரல்வளையை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக சிறுமி யாரோ ஒருவருடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று அவர் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு செல்போனில் நீண்ட நேரம் யாருடனோ பேசியுள்ளார்.
இதனை பார்த்த பாலமுருகன் யாருடன் செல்போனில் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு சிறுமியிடம் இருந்து சரியான பதில் இல்லை.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பாலமுருகன் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும் அவரது குரல்வளையை நெறித்துள்ளார். இதன்காரணமாக சிறுமி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அதனைக்கண்டு பதறிய பாலமுருகன் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பழனி நகர காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.