வடிவேலு பட பாணியில் நடந்த மோசடி - 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்
4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சமூகவலைதள புகைப்படத்தால் சிக்கியுள்ளார்.
திருமண மோசடி
நடிகர் அர்ஜுன் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில், பெண் ஒருவர் பல நபர்களுடன் திருமணம் செய்தது போன்ற காமெடி காட்சி இடம்பெற்று இருக்கும். இதே போல் பெண் ஒருவர் பல ஆண்களை வேறு பெயரில் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி திட்டை பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன். இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூகவலைத்தள புகைப்படம்
அப்போது அந்த மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிவதாக கூறி நிஷாந்தி என்ற பெண் சிவச்சந்திரனுக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் பழகி வந்த நிலையில் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.
தனது திருமண புகைப்படத்தை சிவச்சந்திரன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சீர்காழி புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த நெப்போலியன் ( 34) சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2வது கணவர் புகார்
இந்த புகாரில் "இந்த பெண்ணின் பெயர் மீரா என்றும் 2017 ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். கடந்த 2021-ம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த போது என்னை விட்டு ஓடி விட்டார். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். என்னை ஏமாற்றியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்துள்ளனர். விசரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் உண்மையான பெயர் லட்சுமி ஆகும். இவருக்கு பழையாறு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று தர்ஷன் என்ற மகனும், ரேணுகா என்ற மகளும் உள்ளனர்.
சில ஆண்டுகளில் சிலம்பரசன் உயிரிழந்து விட்ட நிலையில், மகனை தனது கணவரின் சகோதரிடமும், மகளை தனது தாய் வீட்டிலும் விட்டு தனது மோசடியை தொடங்கியுள்ளார். முதலில் மீரா என்ற பெயரில் நெப்போலியனை திருமணம் செய்து விட்டு சில ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து, அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டி விட்டு தலைமைறைவாகி விட்டார்.
சிறை
அதன் பிறகு கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த ராஜாவிடம் தான் ஒரு டாக்டர் என கூறி திருமணம் செய்து அவரிடமும் பணத்தை சுருட்டி விட்டு தலைமறைவாகி உள்ளார். அடுத்ததாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நிஷாந்தி என்ற பெயரில் தன்னையும் ஏமாற்றியது குறித்து தற்போதைய கணவர் சிவச்சந்திரன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட லட்சுமியை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்து சிறையிலடைத்தனர்.