டிராவிஸ் ஹெட் பொய் சொல்கிறார்; நடந்தது இதுதான் - உண்மையை உடைத்த சிராஜ்
டிராவிஸ் ஹெட் செய்தியாளர் சந்திப்பில் சொன்ன அனைத்தும் பொய் என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டிராவிஸ் ஹெட்
இதனிடையே 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 141 பந்தில் 140 ரன் எடுத்தார். இதனையடுத்து, முகமது சிராஜ் பந்து வீசியதில் ஆட்டமிழந்தார். அப்போது மைதானத்தை விட்டு வெளியேறும் போது டிராவிஸ் ஹெட் ஏதோ கூற பதிலுக்கு சிராஜ் ஏதோ கூறினார்.
2வது நாள் ஆட்ட முடிவின் பின்னர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், முகமது சிராஜிடம் நன்றாக பந்து வீசினாய் என சொன்னேன், அதற்கு முகமது சிராஜ் மிக மோசமான வார்த்தைகளால் தன்னை தாக்கி பேசியதாகவும் கூறி இருந்தார்.
சிராஜ் விளக்கம்
இது குறித்து விளக்கமளித்துள்ள முகமது சிராஜ், ட்ராவிஸ் ஹெட் உடன் நல்ல போட்டி இருந்தது. அவருக்கு பந்து வீசியதை நான் மிகவும் விரும்பினேன். நாம் வீசும் பந்தில் ஒருவர் சிக்ஸ் அடித்தால் அது நமக்கு கடுப்பாக இருக்கும். நமது ஆர்வத்தை அது தூண்டிவிடும். நான் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அதை கொண்டாடினேன். ஆனால், அவர் என்னை திட்டினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் "நன்றாக வந்து வீசினாய்" என என்னிடம் சொன்னதாக கூறி இருந்தார். அது பொய். அவர் என்னிடம் என்ன சொன்னார்? என்று நீங்கள் டிவியில் பார்க்கலாம். நான் விக்கெட்டை கொண்டாடிக் கொண்டு இருந்த போது, அவர்தான் என்னிடம் வந்து பேசினார்.
நான் எல்லோரையும் மதிக்கிறேன். மற்றவர்களை அவமரியாதை செய்வது எங்கள் வேலை அல்ல. ஏனென்றால் கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் ஹெட் செய்தது தவறு" என தெரிவித்துள்ளார்.