ஆட்டத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ - மைதான ஊழியர்களுக்கு தனது பரிசை வழங்கிய சிராஜ்!
தனது ஆட்ட நாயகன் பரிசு தொகையை இலங்கை மைதான ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் முகமது சிராஜ்.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இனைந்து நடத்தியது . இதில் சூப்பர்4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த ஆசிய கோப்பையின் பைனலில் இரு அணிகளும் நேற்று மோதினர். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கினர். இதில் முகமது சிராஜின் பந்துவீச்சில் இலங்கை அணி நிலைகுலைந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 15.2 ஓவரில் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து 51 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 51 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 8வது முறையாக ஆசிய கோப்பையை இந்தியா வென்றது .
சிராஜின் நெகிழ்ச்சி செயல்
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு கிடைத்த 5,000 அமெரிக்க டாலரை 9இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சம் ) இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்க இருப்பதாக முகமது சிராஜ் அறிவித்தார்.
இது குறித்தது அவர் பேசுகையில் "இந்த பரிசு மைதான ஊழியர்களுக்கானது. ஏனென்றால் அவர்கள் தங்களது பணியை சரியாக செய்யவில்லை என்றால். இந்த தொடரை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது' என்று கூறினார். முகமது சிராஜின் இந்த நெகிழ்ச்சி செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை முகமது சிராஜ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது