இலங்கை நிலையை கண்டு என் இதயமே நொறுங்கி விட்டது... கண் கலங்கிய பிரபல பாடகி

By Petchi Avudaiappan May 12, 2022 10:08 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கண்டு தனது இதயமே நொறுங்கிவிட்டதாக இலங்கை பாடகி யோஹானி கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதற்கிடையில் இலங்கையில் அமலில் உள்ள ஊரடங்கு மே 13 ஆம் தேதி வரை தொடரும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்லலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய கோட்டாயப ராஜபக்‌ச இலங்கையில் ராஜபக்‌சக்கள் இல்லாத இளைஞர்களை கொண்ட புதிய அரசு அமையும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக நாளை ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுக்கும் திட்டத்தை அந்நாட்டு பாடகியான மணிகே மஹே ஹித்தே எனும் சிங்கள பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த யோஹானி முன்னெடுத்துள்ளார். இதற்காக நிதியுதவி அளிக்கும் படி அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நடக்கும் சம்பவங்களால் மனமுடைந்து போனதாகவும், இலங்கைக்கு நிதியுதவி மட்டும் அல்ல, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பது முக்கியம் என்பதால் என் நாட்டுக்காக எனது குரலை பயன்படுத்துவேன் எனவும் யோஹானி தெரிவித்துள்ளார்.