வார சந்தைக்கு வந்த பிரபல பாடகரின் செல்போன் திருட்டு...!

Petchi Avudaiappan
in பிரபலங்கள்Report this article
பல்லாவரம் வார சந்தைக்கு வந்த பாடகரின் செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்றும் சென்னை விமான நிலையம் அடுத்த பல்லாவரத்தில் வார சந்தை நடைபெறும். இந்த வார சந்தை மிகவும் பிரபலமானது என்பதால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி கலை பொருட்கள் சேகரிப்பாளர்கள் உள்பட பலரும் இங்கு வருவது வழக்கம்.
சென்னை மட்டுமின்றி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்களின் கூட்டம் அலைமோதுவதால் கூட்ட நெரிசலில் இருசக்கர வாகன திருட்டு, செல்போன் திருட்டு என அடிக்கடி நடப்பதால் இதனை தடுக்க பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். எப்போதும் போலீசார் இருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற வார சந்தையில் போலீசார் இல்லை என கூறப்படுகிறது.
இதனையறிந்த கொள்ளையர்கள் மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது , பிரபல நாட்டுப்புற மற்றும் திரைப்பட பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நேற்று வாரசந்தையில் செடிகள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்க வந்துள்ளார். அந்த நேரத்தில் அவரின் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் சந்தைக்கு வந்த புஷ்பவனம் குப்புசாமி உட்பட 7 பேரிடம் இருந்து செல்போன் திருட்டு நடைபெற்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட செல்போனை இழந்தவர்கள் அனைவரும் உடனே பல்லாவரம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.