பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார் - திரையுலகினர் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்.
ஜெயச்சந்திரன்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் இரவிபுரம் பகுதியில் கடந்த 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெயச்சந்திரன். சிறு வயதிலே மிருதங்கம் வாசிப்பது, தேவாலயங்களில் பாடல்கள் பாடுவது என தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் 15,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
விருதுகள்
சிறந்த பின்னணி பாடகருக்காக தேசிய விருது, 4 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தமிழக அரசின் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, 5 முறை சிறந்த பின்னணி பாடகருக்கான கேரள அரசின் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏஆர் ரகுமான், எஸ்ஏ ராஜ்குமார், ஜி.வி.பிரகாஷ் வரை பல தலைமுறை இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.
பாடல்கள்
‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, 'காத்திருந்து காத்திருந்து', 'கொடியிலே மல்லிகைப்பூ', ‘ஒரு தெய்வம் தந்த பூவே’, 'சொல்லாமலே யார் பார்த்தது', 'காதல் வெண்ணிலா கையில் சேருமா' உட்பட இவரது பல பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது.
80 வயதான ஜெயச்சந்திரன் உடலநலக்குறைவு காரணமாக கேரளாவின் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(09.01.2025) உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.