அதிரடியாக செயல்படும் சிங்கப்பெண் அதிரடி படை... முதல் புகாரில் சிக்கிய நபர்
தமிழகத்தில் கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடி படைக்கு முதல் புகார் இன்று வந்துள்ள நிலையில், தீவிரமாக செயல்பட்டு நபரை கைது செய்துள்ளனர்.
சிங்கப்பெண் படை
தமிழக முதலமைச்சர் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தினை கடந்த 9ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். இதன் பின்பு அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அதிரடியாக களமிறங்கியுள்ளது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அதிகரித்து வரும் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்த அதிரடி படை தொடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 70 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 12 அதிரடிப்படை குழுக்கள் கண்காணித்து வருகின்றது.
இந்த சிங்கப்பெண் படைகள் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணித்து வருகின்றனர். மகளிர் காவல் நிலைய போலிசாரும் இந்த சிங்கப்பெண் படையுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
முதல் புகாரில் நபர் கைது
இந்நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம், மதியம் 1 மணியளவில், சுரேஷ்(36) என்ற நபர் மதுபோதையில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு பெண்ணை மீட்டதுடன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சிங்கப்பெண் சிறப்பு படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்வரி மற்றும் சில பெண் போலிசார் சுரேஷை பிடித்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சுரேஷை கைது செய்த போலிசார் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்துள்ளனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரம்பிக்கப்பட்ட பின்பு வந்த முதல் வழக்கு இதுவாகும்.