தனது கதாபாத்திரத்தை நிஜமாக்கிய சிங்கம் பட நடிகர் : சிக்கினார் பெங்களூர் போலிசாரிடம்
போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக நைஜீரிய நடிகரை பெங்களூரு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பாலிவுட், கன்னடா, தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் செக்யூம் மால்வின் Chekwume Malvin.
இவர் தமிழில் நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும், கமலின் விஸ்வரூபம் படத்திலும் நடித்துள்ளார். பெங்களூரு கிழக்கு பிரிவு போலீசார் கூற்றுப்படி, மல்வின் மருத்துவ விசாவில் இந்தியாவில் இருந்ததாகவும், மும்பையில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமியில் இரண்டு மாத பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, பெங்களூருவில் எச்.பி.ஆர் லேஅவுட்டில் தங்கியிருந்து மல்வினை கைது செய்தனர். கைதான நபர் கல்லூரி மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் போதைப் பொருள் விநியோகித்து வந்ததாக கூறப்படுகிறது.
மல்வின் விஸ்வரூபம், சிங்கம், அண்ணா பாண்ட், தில்வாலே, ஜம்பூ சவரி , பரமாத்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் மூன்று நோலிவுட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அவரிடமிருந்து 15 கிராமுக்கு மேற்பட்ட எம்டிஎம்ஏ, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 மிலி ஹாஷ் ஆயில், செல்போன், ரூ. 2,500 ரொக்க பணம் மற்றும் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்த காவல் துறையினர், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்