ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறும் சாம்பியன் - என்ன காரணம்?
அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த சிமோன் பைல்ஸ் இதுவரை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் 25 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்கில் ஏதாவது புதுவிதமான நகர்வை செய்தால் அதற்கு அந்த வீரரின் பெயரே சூட்டப்படும். அந்த வகையில் பைல்ஸ் பெயரில் நான்கு ஜிம்னாஸ்டிக் திறன்கள் இருக்கிறது.
ஐந்தாவதாக ஒன்றை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸ் மையத்தில் சிமோன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரால் துல்லியமாக ஈடுபட முடியவில்லை என்றும், போட்டியின் போதும் இது எதிரொலித்தது.
அவர் வெறும் 13.733 என்ற ஸ்கோர் மட்டுமே பெற்றார். அதன்பின் தனது பயிற்சியாளர் சிசிலி லாண்டி மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் தடகள பயிற்சியாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிமோன் இறுதியாக போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
மருத்துவ பிரச்சினை காரணமாக இறுதி போட்டியில் இருந்து விலகியுள்ள அவர் வரும் காலத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான மருத்துவ அனுமதியை பெற தினமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனநல பிரச்சனையே சிமோன் பைல்ஸ் போட்டியில் இருந்து வெளியேற காரணம் என கூறப்படுகிறது.
அவரால் தான் டோக்கியோவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு அமெரிக்க அணி தகுதிப்பெற்றது குறிப்பித்தக்கது.