இந்திய அணி 3 உலகக்கோப்பையை தோற்க இந்த 3 விஷயங்கள்தான் காரணம் - நியூஸி. வீரர் அதிரடி!
கடைசி 3 உலகக்கோப்பையை இந்திய அணி தோற்றது பற்றி முன்னாள் நியூசிலாந்து வீரர் தனது கருத்தை கூறியுள்ளார்.
உலகக் கோப்பை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி போட்டிகள் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள், அணியில் இடம் பெறாத வீரர்கள், அணித்தேர்வு குறித்து பல விவாதங்களும் நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே பல கிரிக்கெட் வீரர்கள், இந்த அணிகள்தான் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்றும் இந்த அணிதான் உலகக் கோப்பையை வெல்லும் என்றெல்லாம் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடைசி 3 உலகக்கோப்பையை இந்த காரணங்களால்தான் இந்திய அணி தோற்றது என்று முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல் தனது கருத்தை கூறியுள்ளார்.
சைமன் டவுல்
அவர் கூறியதாவது "இந்திய வீரர்கள் பயமில்லாமல் கிரிக்கெட் ஆடுவதில்லை. அவர்கள் புள்ளிவிவரத்தை வைத்து கிரிக்கெட் ஆடுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த புள்ளிவிவரங்களை (சதம்,ரன்கள், ரெக்கார்டு, விக்கெட்கள் உள்ளிட்டவை) குறித்தே அதிகம் கவலை கொள்கிறார்கள்.
அந்த ஒரு விஷயத்தில் தான் அவர்கள் பேட்டிங் எனக்கு கவலை அளிக்கிறது. அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால், ஒரு தொடரின் சரியான சமயத்தில் பயமில்லாமல் கிரிக்கெட் ஆட வேண்டும்.
அதுதான் அவர்களை கடந்த மூன்று உலகக்கோப்பை தொடர்களில் கீழே தள்ளி இருக்கிறது. அவர்கள் தைரியமாக ஆட, ரிஸ்க் எடுக்க மறுக்கிறார்கள். தங்களைப் பற்றி விமர்சனம் எழுதிவிடுவார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள்" என சைமன் டல் அதிரடியாக கூறியுள்ளார்.