1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் - சிம்பு தொடர்ந்த வழக்கில் சிக்கிகொண்ட விஷால்
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து தன்னை நீக்க கோரிய நடிகர் விஷாலின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வெளியான படம் ‘அன்பானவன், அடங்காதவன், அசராதவன்’. இப்படத்தில் நடித்துக் கொடுக்க நடிகர் சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், படம் வெளியான பிறகு தோல்வி அடைந்தது. இதனையடுத்து, இந்த படத்திற்காக 1 கோடியே 51 லட்ச ரூபாய் மட்டுமே சிம்புவிற்கு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, நடிகர் சிம்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், தன்னை குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக நடிகர் சிம்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால், இந்த வழக்கிலிருந்து தன்னை நீக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நடிகர் விஷாலை நீக்குவதற்கு நடிகர் சிம்பு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்மனுதாரர் பட்டியலிலிருந்து நீக்க கோரிய நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.