வைரலாகும் தப்பு பண்ணிட்டேன் பாடல்! ஹிட் ஆகும் சிம்பு - யுவன் கூட்டணி! ரசிகர்கள் கொண்டாட்டம்!
யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ‘தப்பு பண்ணிட்டேன்’ இண்டிபெண்டண்ட் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செல்வராகவன் – யுவன், விஷ்ணு வர்தன் – யுவன் கூட்டணி போன்றே ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றக்கூட்டணி என்றால், அது சிம்பு – யுவன் கூட்டணிதான். யுவன் இசையில் ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ என அத்தனை திரைப்பட பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை ஆகும்.
இந்தக் கூட்டணி எப்போதும் கவனம் பெற சிம்பு ஒரு நல்ல இசை ரசிகராக இருப்பதே முக்கிய காரணம்.

சிம்பு படத்திற்கு யுவன் இசையமைத்தாலே அந்தப் படத்தில் ஒரு பாடலையாவது சிம்பு பாடுவார். முக்கியமாக யுவன் – சிம்பு போட்டிப்போட்டுக்கொண்டு பாடிய எவண்டி உன்ன பெத்தான் பாடல் இந்தியா முழுக்க வைரல் ஆனது.
இந்தக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களை, உற்சாகப்படுத்தும் விதமாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மாநாடு’ படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின், முதல்பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இண்டிபெண்டண்ட் ஆல்பம் ’தப்பு பண்ணிட்டேன்’ பாடலில் சிம்பு இணைந்துள்ளார்.
சிம்பு பாட காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கேட்பதற்கு ’லூசு பெண்ணே’பாடல்போல் இருக்கும் இப்பாடலை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டு வருகின்றனர்.