வெள்ளி நகைகளின் தூய்மைக்கு புதிய உத்தரவாதம்: ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கும் நடவடிக்கையில் BIS
தங்க நகைகளுக்கு தற்போது ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதேபோல் வெள்ளி நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கும் ஹால்மார்க்கிங் முறையை கட்டாயமாக்க இந்தியத் தர நிர்ணய அமைப்பு (BIS) நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்குத் தேவையான ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை BIS ஆய்வு செய்து வருகிறது. 2005ஆம் ஆண்டு முதல் வெள்ளி ஹால்மார்க்கிங் விருப்பத்திற்குட்பட்டதாக இருந்து வருகிறது.

எனினும், 2025 செப்டம்பர் மாதம் முதல் ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளிப் பொருட்களில் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் (HUID) இடம்பெற உள்ளது. இதன் மூலம் நுகர்வோர் பொருளின் தூய்மையை எளிதாகச் சரிபார்க்க முடியும்.
இதுகுறித்து BIS தலைமை இயக்குநர் சஞ்சய் கார்க் கூறுகையில், “வெள்ளி ஹால்மார்க்கிங் என்பது தங்க ஹால்மார்க்கிங்கைவிட சற்று சிக்கலானது. அதற்குக் காரணம் அதன் செயல்முறை அல்ல; வெள்ளிச் சந்தையின் தன்மையே முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்க ஹால்மார்க்கிங் என்பது BIS வழங்கும் கட்டாயச் சான்றிதழாகும். இது தங்கத்தின் தூய்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், வெள்ளி ஹால்மார்க்கிங் தற்போது கட்டாயமில்லை.

மேலும் அவர் கூறுகையில், “தங்கத்தைப் போல அல்லாமல், வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் சிறிய கடைகள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகைப் பொருட்களும் இதில் அடங்கும்.
எனவே, இதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறைகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்” என்றார். BIS அமைப்பில் ஹால்மார்க்கிங் பணிகளை நேரடியாக வெறும் ஐந்து அதிகாரிகள் மட்டுமே நிர்வகித்து வருவதாகவும், மற்ற பணியாளர்கள் தனியார் நிறுவனங்கள் அல்லது வெளி ஒப்பந்தங்கள் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,
தனியார் பங்களிப்புடன் ஹால்மார்க்கிங் மையங்களை திறம்பட இயக்குவதும், நுகர்வோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் சஞ்சய் கார்க் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கான தன்னார்வ ஹால்மார்க்கிங் முறையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதை கட்டாயமாக்கும் விஷயத்தில் BIS எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்தவித தவறுகளும் ஏற்படாத வகையில் நாங்கள் திட்டமிட்டே படிப்படியாக முன்னேறி வருகிறோம்.
இதை கட்டாயமாக்குவதற்கு முன்பு, முழு அமைப்பையும் வலுப்படுத்த விரும்புகிறோம். வெள்ளிக்கான ஹால்மார்க்கிங் முறையை கட்டங்களாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அனிகாவின் புகைப்படம்! அப்படியென்ன ஆடை அணிந்திருக்கிறார்? Manithan