ராணி 2-ம் எலிசபெத்தை கொலை செய்வேன் - வீடியோவுடன் வெளியான மிரட்டல்
இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தை கொலை செய்வேன் என வீடியோவுடன் மிரட்டல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராணி 2 ஆம் எலிசபெத் தங்கியிருக்கும் வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதத்துடன் ஊடுருவிய 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து ராணி 2 ஆம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக தன்னை இந்திய சீக்கியர் என அடையாளப்படுத்தி கொள்ளும் நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அந்த வீடியோவில் முகமூடி அணிந்துகொண்டு பேசும் அந்த நபர் தனது பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்றும், தான் இந்திய சீக்கியர் என்றும் கூறுகிறார்
மேலும் சுதந்திர போராட்ட காலத்தில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது ராணுவ அதிகாரி ஜெனரல் டயர் என்பவர் தலைமையிலான ராணுவத்தினர் 1,650 முறை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர்.
இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று பதிவானது. இதற்கு பழிக்கு பழியாக ராணி 2 ஆம் எலிசபெத்தை கொலை செய்வேன் என்று ஆவேசமாக கூறுகிறார்.இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.