ஹேப்பி நியூஸ்... விரைவில் பயன்பாட்டுக்கு வரும் நோவாவாக்ஸ் தடுப்பூசி..!
இந்தியாவில் நோவாவாக்ஸ் தடுப்பூசியை அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.
உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை தடுக்க தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வு என்ற நிலையில் அனைத்து நாடுகளும் முழு வீச்சில் அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதற்கேற்றதுபோல் ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டிய மக்கள் இப்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தான் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி சீரம் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது.
அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரம் நிறுவனம்தான் கோவிஷீல்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது.
சீரம் நிறுவனத்தில் தயாராக இருக்கும் நோவோவேக்ஸ் தடுப்பூசி 90.4 சதவிகிதம் அளவுக்கு கொரோனாவுக்கு எதிராக பலனளிக்கும் என்று சோதனையின்போது தெரியவந்துள்ளதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.