கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்ட விவகாரம் - முதல் முறை வாய் திறந்த சித்தார்த்!
கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் பேசியுள்ளார்.
சித்தார்த் விவகாரம்
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'சித்தா' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெங்களூரில் நடைபெற்றது.
அப்போது கன்னட அமைப்பினர் கும்பலாக உள்ளே நுழைந்து "இங்கிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் போகிறது, அதனை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். இங்கே வந்து தமிழ் படம் பற்றி பேசிக் கொண்டிருப்பதா? என எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் நடிகர் சித்தார்த் தமது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனையடுத்து சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் "ஒரு கன்னடனாகவும், கன்னடர்கள் சார்பாகவும் இதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன், சாரி சித்தார்த்' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார். மேலும், கன்னட நடிகர் சிவராஜ்குமார் "மற்றவர்களின் உணர்வுகளை நாம் எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது. கன்னட திரையுலகம் சார்பாக நாங்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் சித்தார்" என்று பேசினார்.
பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய நடிகர் சித்தார்த் பேசியுள்ளார். அவர் பேசியதாவது' "சித்தா’ திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கும், முக்கியமானவர்களுக்கும் திரையிட்டு காட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
சென்னை மற்றும் கேரளாவில் ஏற்பாடுகள் நடந்தன. அதேபோல் பெங்களூருவிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், 2000 மாணவர்களுக்கும், அந்தத்திரைப்படத்தை போட்டுக்காட்ட திட்டமிடப்பட்டி ருந்தது. இதுவரை இதனை யாரும் செய்ய வில்லை. அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை முடித்து விட்டு, அங்கிருந்தவர்கள் ‘சித்தா’ திரைப்படத்தை பார்க்க இருந்தனர்.
அதேபோல் மிக முக்கியமான கன்னட திரைபிரபலங்களும், திரைப்படத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், பந்த் காரணமாக அவையனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால், எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தை அங்குள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது” என்று சித்தார்த் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர் "என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது அங்கிருந்த பல கேமராக்களுக்கு முன்னால் நடந்தது. நான் இது பற்றி பேச விரும்பவில்லை. படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கவனத்தை சிதறடிக்கும் வகையில் எதையும் பேச விரும்பவில்லை. என் படத்துக்கும் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பணத்தை செலவழித்து, நான் தயாரிக்கும் படங்களில், எனது சமூகப் பொறுப்பு வெளிப்படும் என்று நம்புகிறேன்" என்று சித்தார்த் பேசியுள்ளார்.