கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு - காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை பிடித்த காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியை தன்வசமாக்கியது.
அதாவது, காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிட்டு, சுமார் 135 இடங்களில் வெற்றியைப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 13 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்த அடுத்த நாளே, காங்கிரஸ் MLA-க்களின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
மேலிடப் பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங் மற்றும் தீபக் பபாரியா ஆகியோரின் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சராக சித்தராமையா தேர்வு
பெரும்பான்மை MLA-க்களின் ஆதரவு, சித்தராமையாவுக்குத் தான் கிடைத்தது. கர்நாடக முதலமைச்சர் பதவி விவகாரத்தில் சில நாட்களாக இழுபறி நிலை முடிவுக்கு வராமல் இருந்ததால், கர்நாடக அரசியல் சற்று பரபரப்பாகவே இருந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடக முதல் அமைச்சராக சித்தராமையாவைத் தேர்வு செய்துள்ளனர். துணை முதல் அமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. வருகின்ற மே 20 ஆம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.