திருமண மண்டபத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேரை கைது செய்த போலீசார்
தூத்துக்குடியில் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெர்மல் நகர், கேம்ப் 2 பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (20), இவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது மண்டபம் அருகே நிறுத்தியிருந்த அவரது பைக் மீது ஒருவர் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்து உதயமூர்த்தி அந்த நபரை கண்டித்தாராம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபருக்கு ஆதரவாக வந்த சிலர் உதயமூர்த்தியிடம் தகராறு செய்து அவரை தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில், காயம் அடைந்த உதயமூர்த்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக அந்த திருமண விழாவில் கேட்டரிங் வேலைக்கு வந்த அழகேசபுரத்தைச் சேர்ந்த தோப்புசாமி மகன் மாரீஸ்வரன் (40), மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ணராஜபுரம் வேல்முருகன் மகன் செல்வபெருமாள் (27), சுந்தரவேல்புரம் ஜான்சன் மகன் ஜேம்ஸ் (20), ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அழகேசபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.