விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை - எஸ்.ஐ. கைது
ராஜஸ்தானில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்திலுள்ள பால்டா போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக இருக்கும் ஜக்திஸ் பிரசாத் (59) என்பவர் கடந்த ஜனவரியில் இருந்து ஒரு வழக்கு சம்பந்தமாக 25 வயதுடைய பழங்குடியின பெண்ணை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த மே 2 ஆம் தேதி இரவில் அந்த இளம்பெண் ஒரு திருமண விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு வந்த ஜக்திஸ் பிரசாத் இளம்பெண்ணை வெளியே வரவழைத்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதிக்கு சென்றதும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் திருமண விழா நடந்த இடத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து இளம்பெண் தனது கணவரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்க பிரசாத் பணி செய்த அதே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மே 4 ஆம் தேதி இளம் பெண் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.