4 ஆண்டுகாலமாக சபதம் எடுத்த தந்தை - கச்சிதமாக முடித்து காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மூலம் ஸ்ரேயாஸ் அய்யர் தனது தந்தையின் நீண்ட கால சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.
கான்பூரில் நேற்று தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதமடித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தனது டெஸ்ட் தொப்பியை பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரிடம் பெற்றார். மேலும் 18 வருடங்களுக்கு பின் யுவராஜ்சிங்கிற்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது என்றால் அது ஸ்ரேயாஸ் அய்யர் தான்.
இதனிடையே ஸ்ரேயாஷ் அய்யரின் தந்தை சந்தோஷ் அய்யர் , தனது மகன் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அடியெடுத்து வைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார் . டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்றும், தனது மகன் நாட்டுக்காக வெள்ளை நிற ஜெர்சியில் விளையாடுவதை பார்க்க விரும்பி தவம் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிட்-டே ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சந்தோஷ் அய்யரின் வாட்ஸ்அப் டிஸ்ப்ளே படத்தில் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு படம் உள்ளது. இந்த படத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு கோப்பையை கையில் வைத்துள்ளார். இந்தப் படம் தர்மசாலாவில் எடுக்கப்பட்டது. பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில், அப்போது, இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது.
கடந்த நான்கு வருடங்களாக இந்தப் படத்தை ஏன் மாற்றவில்லை என்று சந்தோஷ் விளக்கமும் தந்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதே தனது வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்காக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் தொடர்ந்து நினைவுபடுத்தும். அதற்காகத்தான் நான் அந்த படத்தை மாற்றாமலே வைத்திருந்தேன். இன்று எனது மகன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி எனது கனவை நிறைவேற்றிவிட்டார் என கூறியுள்ளார்.