ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடமில்லை - ரோகித் சர்மா பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாத காரணத்தை கேப்டன் ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்தியா வென்றது.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நாளை 2வது போட்டி நடக்கவுள்ள நிலையில் முதல் டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாததது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாத காரணத்தை கேப்டன் ரோகித் சர்மா விளக்கியுள்ளார். அதாவது ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கொடுக்காமல் போனது கடினமான முடிவாகும். இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் பந்து வீசும் வகையில் ஒருவர் தேவைப்படுகிறார். இதனால் நாங்கள் அவரை ஆடும் லெவன் அணியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
வீரர்களுக்கு இடையில் அணியில் இடம் பிடிக்க போட்டி இருப்பது சிறப்பானது என தெரிவித்துள்ள ரோகித் சர்மாவிடம் அடுத்த போட்டியிலாவது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.