கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சிக்கலை தீர்க்க பிரதமருக்கு ராகுல் காந்தி சொன்னது என்ன?
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பாதிப்புகளோடு கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் மற்றும் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
தற்போது வரை 9 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடுகளை தீர்க்க காங்கிரஸ் எம்.பி ராகுல் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலை குறித்து கவலை தெரிவித்தவர் பல்வேறு குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
BREAKING: Our scientific community and vaccine suppliers worked overtime to develop a solution but their efforts are undermined by the centre’s poor implementation and ‘oversight’: Rahul Gandhi writes to PM Modi over Covid vaccination in India. pic.twitter.com/d3tI5uy5p7
— Prashant Kumar (@scribe_prashant) April 9, 2021
அவர் முன்வைத்துள்ள பரிந்துரைகள், “தடுப்பூசி தயாரிப்பவர்களுக்கு தேவையான வளங்களை ஏற்படுத்தித் தர வேண்டும். தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும். வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தடுப்பூசிக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். ஏழை குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும்” என்றுள்ளார்.