மீண்டும் அதிமுகவில் சலசலப்பு ? - எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீச்சு
அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளரான முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு திரளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவியும் வணங்கினார்கள். இந்நிலையில் திடீரென செருப்பு ஒன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தின் மீது வீசப்பட்டது.
எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்தே இந்த செருப்பு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.