தமிழர்கள் குறித்து சர்ச்சை பேச்சு - மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ் கண்டனம்!
மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் சர்ச்சை பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சை பேச்சு
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டு வெடித்தது. இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ஷோபா கூறுகையில், "தமிழ்நாட்டிலிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
இந்த சர்ச்சை பேச்சுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பெங்களூரு குண்டு வெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் பொறுப்பற்ற கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஒருவர் என்.ஐ.ஏ. அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது குண்டுவெடிப்பு சம்பவத்துடன் நெருக்கமாக தொடர்புடையவராக இருக்க வேண்டும். பா.ஜ.க.வின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும் கன்னடியர்களும் நிச்சயமாக நிராகரிப்பார்கள்.
கண்டனம்
அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
பிரதமர் முதல் தொண்டர் வரை பா.ஜ.க.வில் உள்ள அனைவரும் கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய அமைச்சரின் இந்த வெறுப்புப் பேச்சை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவின் அவர்களின் வெறுப்புப் பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.
இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுக்களை இனியும் யாரும் பேசாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.