கூடவே இருந்து ஷோபனாவிடம் பணம் திருடிய பெண் - காரணம் தெரிந்ததும் மன்னித்து ஏற்றுக்கொண்டார்!
பணம் திருடிய பணிப்பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார் நடிகை ஷோபனா.
பணம் திருடிய பணிப்பெண்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷோபனா. தமிழ், தெலுங்கு,மலையாளம் கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துடன் இவர் நடித்த தளபதி என்ற படம் மிகப் பெரிய ஹிட். அந்த படத்தில் இவரின் நடிப்பு அமோகமாக இருக்கும். கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு "வரனே ஆவஷயமுண்டு" என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
ஷோபாவின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் ஸ்ரீமான் சீனிவாசா சாலையில் அமைந்துள்ளது. இவரின் வீட்டில் கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயிலைச் சேர்ந்த விஜயா என்பவர் காலம் காலமாக வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். ஷோபனாவின் தாயாரை கவனித்துக் கொள்ளும் வேலை செய்து வருகிறார் விஜயா. இந்நிலையில் தாயார் வீட்டில் வைத்திருந்த பணம் சிறிது சிறிதாக காணாமல் போயிருக்கிறது. இதனால் விஜயா மீது சந்தேகம் அடைந்த ஷோபனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மன்னித்து ஏற்றுக்கொண்ட ஷோபனா
புகாரின் பேரில் அங்கு வந்த தேனாம்பேட்டை போலீசார் விஜாயாவிடம் விசாரணை மேற்கொண்ட போது 41000 ரூபாய் பணம் திருடியதை பணிப்பெண் விஜயா ஒப்புக் கொண்டுள்ளார். அந்த பணத்தை ஊரில் உள்ள தனது மகளுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. மேலும், வறுமையினால் இப்படி செய்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டதால் ஷோபனா அவரை மன்னித்து புகாரை வாபஸ் பெற்றுள்ளார். மேலும் தொடர்ந்து தனது வீட்டிலேயே அவரை பணிசெய்ய ஒப்புக் கொண்டு திருடிய பணத்தை விஜயாவின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வதாகவும் ஷோபனா தெரிவித்துள்ளார்.