அப்படி செய்ததிற்காக தோனியிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் - எதற்கு தெரியுமா?
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
சுஐப் அக்தர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபலமான பந்து வீச்சாளர்களுள் ஒருவர் சுஐப் அக்தர். கடந்த 1997ம் ஆண்டு பாஸ்ட் பவுலராக பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்து வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையும் இவரை சேரும். '
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என்ற புனைப்பெயரும் இவருக்கு உண்டு. ஏனெனில் இவரின் பாஸ்ட் பவுலிங்கிற்கு நடுங்காத பேட்ஸ்மேன்கள் இல்லை. உலகின் அதிவேக பந்து வீச்சாளராக மணிக்கு 161 கிலோமீட்டர் மேல் வீசி இருக்கிறார் பாகிஸ்தான் தேசிய அணியிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார் அக்தர்.
தோனியிடம் மன்னிப்பு
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ராவுடன் ஒரு உரையாடலில் பங்கேற்ற அக்தர் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனியிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் குறித்து பேசியிருந்தார்.
அதில் 'நான் 2006ம் ஆண்டு பைசலாபாத் டெஸ்ட் போட்டியில் 8,9 ஓவர்கள் கொண்ட நீளமான ஸ்பெல் வீசினேன். அப்போது தோனி சதம் அடித்து களத்தில் இருந்தார். அந்த சமயத்தில் நான் அவருக்கு வேண்டுமென்றே பீமர் பந்து வீசினேன். பிறகு அதற்காக தோனியிடம் நான் மன்னிப்பு கேட்டேன். இதுதான் எனது வாழ்க்கையில் நான் முதல்முறையாக வேண்டுமென்றே ஒரு பேட்ஸ்மேனுக்கு பீமர் பந்து வீசியது.
நான் அப்படி செய்திருக்கவே கூடாது. நான் அதற்காக மிகவும் வருந்தினேன். தோனி மிகவும் நன்றாக விளையாடினார். விக்கெட் மிகவும் மெதுவாக இருந்தது. நான் எவ்வளவு வேகமாக வீசினாலும் அதை அவர் அழகாக தடுத்து விளையாடினார். மேலும் அவர் பந்தை அடிக்கும் போது நான் விரக்தி அடைந்தேன். இதனால்தான் அப்படி செய்து விட்டேன்” என்று அக்தர் பேசியுள்ளார்.