ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்த விவகாரம் - பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோட் மாவட்டம் கான்ஹாகட் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா, கரிவலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த நிலையில் அவருடைய பள்ளியில் படிக்கும் 18 பேருடன் ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்டுள்ளார்.
ஷவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒன்றின்பின் ஒருவராக மயங்கிவிழ அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு விஷத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 16 வயது தேவநந்தா நேற்று உயிரிழக்க 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஷவர்மா விற்கப்பட்ட ஐடியல் என்ற கடைக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டு அந்த உணவை சமைத்தவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே, ஐடியல் உணவக மேலாளர் அனஸ், ஊழியர் சந்தேஷ் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவில் இந்த பாக்டீரியா பரவும் என்றும் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவர்களுக்கு இந்த பாக்டீரியா பரவி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.