இந்தியா மீது போரிட்டு நாங்கள் சரியான பாடம் கற்றுகொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உருக்கம்..!
இந்தியா மீது போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுகொண்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் உருக்கமாக பேசியுள்ளார்.
3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும்
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது .
தற்போது கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இது தவிர அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள தனது தூதரகத்தையும் பாகிஸ்தான் அரசு விற்க முடிவு செய்து உள்ளதாகவும், சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் தூதரகக் கட்டடத்தைப் பலர் ஏலம் எடுப்பதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது, சர்வதேச நிதியத்திடமும் 650 கோடி டாலரை கடனாக பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. இருந்தாலும், பாகிஸ்தான் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வழியில்லை என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் அந்நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் என்று சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி
இந்நிலையில், இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்று கொண்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறுகையில்,
பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. நம்மிடம் பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாக பயன்படுத்தி, வளர வேண்டும் என்பது எங்களது விருப்பம். நாங்கள் இந்தியாவுடன் 3 போர்களை நடத்தியுள்ளோம்.
அந்த போர் மக்களுக்கு அதிக துன்பத்தையையும், வறுமையையும் மற்றும் வேலையின்மையையும் மட்டுமே கொடுத்தது. இந்தியாவுடன் நடந்த போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்று கொண்டோம். அமைதியாக நாங்கள் வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்சினையை சுமூகமாக முடிக்க விரும்புகிறேன்.
இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும்.
இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.