அன்று நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்... இன்று பாகிஸ்தான் பிரதமர் : அதிரவைக்கும் தகவல்

china Pakistan imrankhan shehbazsharif
By Petchi Avudaiappan Apr 11, 2022 05:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ள ஷெபாஸ் ஷரீஃப் யார்?  என்பது குறித்து நாம் காண்போம்.

 பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது 2வது முறையாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் அவரது அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். 

இதனிடையே பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீஃப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் இளைய சகோதரர் ஆவார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக ஷெபாஷ் ஷரீஃப் செயல்பட்டு வருகிறார்.

அதேசமயம் இம்ரான் கானுக்கு பதிலாக ஷெபாஷ் ஷரீஃப் ஆட்சி பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு .பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, தனது அரசியல் எதிரியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கிற்கு வாய்ப்பளித்துள்ளது. 

நவாஸ் ஷெரீஃப் போல் மக்கள் கூட்டத்தை தன்பக்கம் இழுக்கும் கவர்ச்சியான பேச்சாளர் ஷெபாஸ் ஷரீஃப் இல்லை. நிர்வாகத் திறனில் அவரது பலம் இருப்பதாக பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதும் நிலையில், செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஷெபாஸ் ஷரீஃப் தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் தனது சகோதரர் நவாஸ் ஷரீஃபை போல் அரசியல் களத்தில் இறங்கினார். 

கல்லூரி படிப்புக்குப் பின் தனது குடும்ப நிறுவனமான இத்திஃபாக் குழுமத்தில் பணிபுரிந்த ஷெபாஸ் 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷரீஃப் தேர்வு செய்யப்பட்டபோது, முதல்முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1997 ஆம் ஆண்டு நவாஸ் ஷரீஃப் மீண்டும் பிரதமரான போது பாகிஸ்தானின் சக்திவாய்ந்த முக்கியத்துவமான மாநிலமாக கருதப்பட்ட பஞ்சாப்பின் முதலமைச்சராக ஷெபாஸ் ஷரீஃப் தேர்வானார். 

ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையை மாற்ற நவாஸ் ஷரீஃப் முயன்றபோது சகோதரர்கள் இருவரையும் விரட்டிவிட்டு ஆட்சியை கையில் எடுத்தது. ஷெபாஸ் குடும்பத்தோடு சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு வரை அங்கிருந்த நவாஸ் ஷரீஃபும், ஷெபாஸ் ஷரீஃபும் நாடு திரும்பியவுடன் தங்களது பதவிகளில் அமர்ந்தனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டு நவாஸ் ஷரீஃப் ஆட்சி ஊழல் புகார் காரணமாக  கலைக்கப்பட்டவுடன் அவருக்கு மாற்றாக ஷெபாஸ் ஷரீஃப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . ஆனால் 2018 தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக மாறினார். இவர் சீனாவின் நிதியுதவியுடன் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

னாவுக்கு ஆதரவானவராகவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாடு கொண்டவராகவும் ஷெபாஸ் பார்க்கப்படும் நிலையில் நவாஸ் ஷரீஃபை போலவே ஷெபாஸ் ஷரீஃப் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு ஷெபாசும் அவரது மகனும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.

அவர்களின் குடும்ப வங்கிக் கணக்குகளை பிரிட்டன் முடக்கியது. ஆனால், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஷெபாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிரிட்டன் தேசிய குற்ற விசாரணை நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்த்துவிட்டு ஷெபாஸ் ஷரீஃப் ஆட்சிக்கு வந்திருப்பதால் அவரை தெஹ்ரிக் கட்சியினரும், பொதுமக்களும் தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.