10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
ஒசூர் புறநகர் பகுதியில் இருந்து ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிலேரூ காவல் நிலையம் ஆய்வாளர் சாதிக்அலி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரை ஓட்டி வந்த கண்ணதாசன் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.அப்போது ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
உரிய விசாரனைக்கு பின் அந்த நபர் செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து கண்ணதாசன் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திர போலீசார் ஒசூர் விரைந்தனர்.
பின்னர், ஒசூர் புறநகர் பகுதியில் இருந்த ஒரு குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ் அங்கு பதுங்கி இருந்த பிரபல செம்மர கடத்தல்காரன் இம்ரான் கான் என்பவரை கைது செய்து சித்தூர் அழைத்து சென்றனர்.
இம்ரான் கொடுத்த தகவலின் பேரில் ஒசூர் குடோனில் பதுக்கி வைத்திருந்த 8500 (8.5 டன்) எடையுள்ள 2380 செம்மர கட்டைகளை ஆந்திர போலீசார் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என அந்த மாநில போலீசார் தெரிவித்தனர்.