தமிழகத்தில் ஷவர்மாவிற்கு தடை? - அமைச்சர் அதிரடி..!

Ma. Subramanian
By Thahir May 08, 2022 07:04 AM GMT
Report

தமிழகத்தில் ஷவர்மாவை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது இந்தியாவிலேயே சிறப்பாக தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது.

கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18வயதுக்கு மேற்பட்டவர்கள் 92.89 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இரண்டாவது தவணையாக 79. 39 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர்.

இன்னும் தோராயமாக இரண்டு கோடி மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடாமல் இருப்பதால் அவர்களுக்கு இன்றைய தினம் நடைபெறும் சிறப்பு முகாமில் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சமீபத்தில் கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யப்படும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டு உணவுகளை மக்கள் விரும்ப வேண்டும். ஷவர்மா விற்பனை செய்யப்படும் கடைகளில் தரமானதாக உள்ளதா அங்கு இறைச்சிகள் பதப்படுத்தும் வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆய்வின் அடிப்படையில் சுகாதாரமற்ற ஷவர்மா விற்பனை செய்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரளாவை போன்று தமிழகத்திலும் ஷவர்மாவை தடை செய்திட முடிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.