தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - பரபரப்பு சம்பவம்

By Nandhini May 06, 2022 05:14 AM GMT
Report

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் மாணவியின் மரணத்திற்கு அசுத்தமான உணவு மற்றும் நீரில் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தது.

பரிசோதனையின் போது 10 கிலோ பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, 5 கடைகளுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை ஃப்ரீசரில் வைக்க கூடாது, உணவுப்பொருட்களில் வண்ணம் சேர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் பிரவீன் (22), பரிமலேஸ்வரன் (21), மணிகண்டன் (21) ஆகிய 3 பேர் மயக்கமடைந்துள்ளனர். இதனையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு ஒவ்வாமையே இந்த பாதிப்புக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - பரபரப்பு சம்பவம் | Shawarma