பெண் எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு இப்படியா சொல்வது? - சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Parliment congress Shashi Tharoor
By Petchi Avudaiappan Nov 29, 2021 06:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்  பதிவிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அவர் விளக்கமளித்துள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து எம்.பி.,க்களும் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆஜராகினர். 

இதனிடையே காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது ட்விட்டரில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் உடன் நின்றபடி இடம் பெற்று இருந்தனர்.

அந்த பதிவில் ‘‘மக்களவை வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் கூறுகிறார்கள்? இன்று காலை எனது ஆறு சக எம்.பி.க்களுடன்” என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

தமிழ்நாடு எம்.எல்.ஏ மற்றும் பாஜக மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன், “நாடாளுமன்றத்துக்குள்ளேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிகளை காட்சிப் பொருள் போல் காட்டியிருப்பது மிகவும் தாழ்ந்த செயல் என விமர்சித்திருந்தார். மேலும் காலையில் பெண் எம்.பி.க்கள் உடனான புகைப்படம் போலவே மாலையில் ஆண் எம்.பி.க்கள் உடனான புகைப்புடத்தையும் சசி தரூர் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பெண் எம்.பி.,க்கள் புகைப்படம் குறித்த சர்ச்சைகளுக்கு சசி தரூர் விளக்கமளித்தார். அவரது ட்விட்டர் பதிவில், முழு செல்ஃபி விஷயமும் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் செய்யப்பட்டது. அதே உணர்வில் அதை ட்வீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள். சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன், ஆனால் இந்த பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதெல்லாம் அவ்வளவுதான்’’ என தெரிவித்துள்ளார்.