ஷாருக்கான் மகனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தாரா என்சிபி அதிகாரி? என்ன நடந்தது?
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் போதை பொருள் தடுப்புப்பிரிவு அலுவலர் ஒருவர் செல்பி எடுத்ததாக புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பலான ‘எம்பிரஸ்’ மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகளுடன் கிளம்பிய 3 நாள் பயணத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்து.
கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறி, போதை பொருள் பயன்படுத்தியவர்களை கைது செய்தனர்.
அவர்களுள் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் காணும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த வழக்கு தொடர்பாக விசாரணையில் இருந்த நடிகர் ஷாருக்கான் மகனுடன் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் ஒருவர் செல்ஃபி எடுத்திருந்ததாக ஒரு புகைப்படம் வைரலானது.
அந்த புகைப்படத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்.
அவரோடு சிரித்துக்கொண்டு ஒருவர் செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார். அதை கண்ட நெட்டிசன்கள் அலுவலர்களின் செலிபிரிட்டி மோகத்தை, செல்பி மோகத்தை விமர்சனத்துக்குள்ளாக்கினர்.
விசாரணைக்கு வந்தவருடன் செல்பியா என்று பலர் போதை பொருள் தடுப்பு துறையையே வசை பாடினர். ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது NCBஅலுவலர் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.