அந்த பையனை டீம்ல எடுக்காம இருக்காதீங்க - இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை
தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரு வீரருக்கு கண்டிப்பாக இடமளிக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் தேர்வாளருமான எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது.தென்னாப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல என்பதால் இந்த தொடரை ஒட்டுமொத்த ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே முன்னாள் வீரர்கள் பலர் இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.கே பிரசாத் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷர்துல் தாகூருக்கு இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணி ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என முடிவு செய்தால் நிச்சயமாக அதற்கு ஷர்துல் தாகூர் சிறந்த தேர்வாக இருப்பார். அது பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்.பும்ராஹ், முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் அஸ்வின் ஆகிய நான்கு வீரர்களுக்கு ஆடும் லெவனில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளருடன் களமிறங்க வேண்டும் என முடிவு செய்தால் அது ஷர்துல் தாகூராக இருப்பதே நல்லது என எம்.எஸ்.கே பிரசாத் கூறியுள்ளார்.