“இது இரண்டையும் நான் எப்பவுமே செய்வேன், அதனால் தான் நல்லா விளையாடுறேன்” - ஷர்துல் தாக்கூர் பேட்டி

ashwin shardul thakur youtube interview
By Swetha Subash Dec 29, 2021 10:49 AM GMT
Report

அஸ்வின் மற்றும் தாக்கூர் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலின் போது மனம் திறந்து பேசியிருக்கிறார் தாக்கூர்.

ஹர்திக் பாண்டியா 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு, காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார். அப்போது இந்திய அணிக்கு உள்ளே எடுத்துவரப்பட்ட ஆல்ரவுண்டர்களில் ஒருவர் தாக்கூர்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது கடந்த 10 மாதங்களில் டெஸ்ட் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறார்.

குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள லண்டன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது இரண்டு இன்னிங்சிலும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.மேலும் சில விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் மேல் ரசிகர்களின் கவனம் திரும்பியது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது 4வது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் அபாரமான பங்களிப்பை கொடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்ற முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

அதன்பிறகு தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்று நன்றாக விளையாடினார்.

தற்போது தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி எடுத்தார்.

அப்போது, ‘வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பான பங்களிப்பை எப்படி கொடுத்து வருகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த தாக்கூர்,

“நான் எப்போதும் பந்துவீச்சு மட்டுமே எடுத்து கவனம் செலுத்த மாட்டேன். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் ஒருசேர கவனம் செலுத்துவேன்.

எனது திட்டங்கள் இவை இரண்டிற்கும் சேர்ந்தே இருக்கும். அடுத்ததாக எவ்வளவு தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு இருந்தாலும், தனக்குள் நம்பிக்கை இல்லை என்றால் எதையும் எளிதாகச் செய்துவிட முடியாது.

ஆகையால் தன்னம்பிக்கை மற்றும் சுயபரிசோதனை இரண்டையும் எப்போதும் செய்து கொள்வேன்.

இப்போது இந்தப் பந்தை நான் இப்படித்தான் வீசவேண்டும் என முடிவு செய்தால், அதில் 100% நம்பிக்கையுடன் இருப்பேன். அதன் காரணமாகவே என்னால் நன்றாக செயல்பட முடிகிறது என்று நினைக்கிறேன்.

தென்ஆப்பிரிக்கா மைதானம் இங்கிலாந்து மைதானத்தை போன்று இருக்கிறது. ஆகையால் எனக்கு சற்று பரிட்சயமானதாக தெரிகிறது. இந்த டெஸ்ட் தொடரிலும் என்னால் முடிந்த பங்களிப்பை இந்திய அணியின் வெற்றிக்காக கொடுப்பேன்.” என்றார்.