நீண்ட கால தோழியுடன் பிரபல கிரிக்கெட் வீரர் நிச்சயதார்த்தம் - ஆனால் கல்யாணம் இப்போ இல்ல..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஷர்துல் தாகூருக்கு தனது நீண்ட நாள் காதலியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் இந்திய அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தற்போது விளையாடி வருகிறார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியும் அசத்தி வருகிறார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷர்துல் தாகூர், இதுவரை 15 ஒருநாள், 23 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் தொடருக்கான இந்திய அணியிலும் ஷர்துல் தாகூர் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று தனது நீண்ட நாள் காதலியான மித்தாலி பருல்கர் என்பவருடன் ஷர்துல் தாகூருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உட்பட 75 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.  

ஆனால் திருமணம் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்புதான் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து அடுத்து ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்