அமிஷ் ஷாவை சரத் பவார் சந்தித்தாரா? இல்லையா? மகாராஷ்டிர அரசியலில் புது குழப்பம்
மகாராஷ்டிர கூட்டணி அரசின் நங்கூரமாக விளங்கும் சரத் பவார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தாரா இல்லையா என்பது அம்மாநில அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை வென்றது.
ஆனால் கூட்டணிக்குள் ஏற்பட்ட குழப்பங்களால் எதிர்க்கட்சிகளாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைத்தது சிவசேனா. நிகழ முடியாத இந்த சாத்தியத்தை நிகழ்த்திக் காட்டியவர் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர், தலைவர். பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க மூன்று கட்சிகளும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தன.
உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் அப்போதிலிருந்தே மகாராஷ்டிர அரசுக்கு பாஜக தொடர் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதில் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் அடக்கம். எனவே இந்த பொருந்தாக் கூட்டணி சரத் பவாரை நம்பியே நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சரத் பவார் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அகமதாபாத்தில் ரகசியமாக சந்தித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த சந்திப்பு பற்றி கேட்கப்பட்டபோது எல்லா விஷயங்களையும் வெளியில் சொல்ல முடியாது என அமித் ஷா சூசமாக பதிலளித்திருந்தார். இதனால் மேலும் பரபரப்பு தொற்றியது.
இந்த சந்திப்பு பற்றி ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருந்தாலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது வரை இதனை உறுதிபடுத்தவில்லை.
இந்நிலையில் சிவசேனா எம்.பி சஞ்சய் ரௌத் சரத் பவார் - அமித் ஷா சந்திப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை என மறுத்துள்ளார்.