7 நாளாக தொடர் போராட்டம்: பிடிபட்டது சங்கர் யானை
நீலகிரியில் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானை சங்கர் பிடிக்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நீலகிரி மாவட்டம் சேரம்பாடி பகுதியில் 3 பேரை கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்கும் பணி 7 வது நாளாக நேற்று தொடர்ந்தது. கூடுதலாக வரவழைக்கபட்ட வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக மரத்தின் மீது பரண் அமைக்கப்பட்டு, மரத்தின் அடியில் பழங்களை கொட்டி வைத்து மருத்துவர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து வனத்துறை பணியாளர்களும் பட்டாசுகள் வெடித்து யானைகளை பரண் நோக்கி விரட்டினர். பரண் அருகே வந்த யானை பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, இரண்டு மருத்துவர்களும் அடுத்தடுத்து மயக்க ஊசிகளை செலுத்தினர்.
மயக்கமடைந்த சங்கர் யானை சிறிது தூரம் ஓடி நின்றதும், தயாராக இருந்த கும்கி யானைகள் மற்ற யானைகளை விரட்டியடித்தது. இதனையடுத்து சங்கரை கயிறு கட்டி யானை பாகன்கள் இழுத்ததுடன், லாரியில் ஏற்றி முதுமலை காட்டுக்கு கொண்டு சென்றதுடன் மரக்கூண்டில் அடைத்தனர்.