இயக்குநர் சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது உண்மையா? வெளியான திடுக்கிடும் தகவல்!

rajini flim enthiran
By Jon Feb 02, 2021 09:42 AM GMT
Report

எழும்பூர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இயக்குநர் சங்கர் கடந்த 11 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை என புகாரின் அடிப்படையில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதிமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது, அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை பகிர வேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என சங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்டு என்ற பதிவு நீதிமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்படும் என மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.