“உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர்” - சக வீரரை மனதார பாராட்டிய விராட் கோலி

test virat kohli against south africa about winning talks about shami
By Swetha Subash Dec 30, 2021 12:58 PM GMT
Report

உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என முகமது ஷமியை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 50.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தெ.ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 305 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2-வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 68 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.

சதமடித்த கே.எல். ராகுல், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

செஞ்சூரியனில் மகத்தான வெற்றியை அடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

செஞ்சூரியனில் டெஸ்ட் வென்ற முதல் ஆசிய அணி என்கிற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக செஞ்சூரியனில் டெஸ்ட் வென்ற அணியும் இந்தியா தான்.

தென்னாப்பிரிக்காவில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இரு டெஸ்டுகளை வென்றுள்ளது.

பரிசளிப்பு விழாவில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

“நாங்கள் நினைத்தது போல சரியான தொடக்கம் கிடைத்துள்ளது. நான்கு நாள்களில் வெற்றி கிடைத்திருப்பது நாங்கள் எவ்வளவு நன்றாக விளையாடினோம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் விளையாடுவது எப்போதும் கடினமானது. பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தினோம்.

கே.எல். ராகுலும் மயங்க் அகர்வாலும் எங்களுக்கு அபாரமான தொடக்கத்தை அளித்ததால் முதல் நாளன்று 270/3 என்கிற வலுவான நிலையில் இருந்தோம்.

எதிரணியை ஆட்டமிழக்க வைக்கும் நம்பிக்கை எங்களிடம் உள்ளது. முகமது ஷமி, உலகத் தரமான பந்துவீச்சாளர்.

என்னைப் பொறுத்தவரை உலகின் சிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.

அவர் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சை அவர் வெளிப்படுத்தி வருகிறார்” என்றார்.