பொன்னியின் செல்வன்:ரீ - என்ட்ரி கொடுக்கும் ஷாலினி? சுரேஷ் சந்திரா தகவல்!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி நடித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
ஷாலினி
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி. இதைத்தொடர்ந்து 1997-ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மணிரத்னம் இயக்கத்தில் 2000-ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். ஷாலினிக்கும் அஜித்குமாருக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
சினிமா கம்பேக்
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஷாலினி தற்போது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் ஷாலினி மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி ஆக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
2 பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஷாலினி சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே ஷாலினி அஜித்குமாரின் சினிமா கம்பேக் பற்றி அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி அஜித்குமார் நடிப்பதாக வெளியான தகவலில் ஒருசதவீதம் கூட உண்மையில்லை. இது முற்றிலும் தவறான தகவல் என அவர் கூறியுள்ளார்.
இதனால் ஷாலினி அஜித்குமாரை மீண்டும் வெள்ளித்திரையில் காணலாம் என எதிர்நோக்கியிருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.