"பஞ்சாப் அணியின் கேப்டன் இவர் தான்” - விருப்பத்தை சொன்ன தமிழக வீரர்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக யார் வர வேண்டும் என்பதை தமிழக வீரர் ஷாரூக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தின் முடிவில் சுமார் 204 வீரர்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக ரூ.551 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிக சிறந்த முறையில் தனது பங்களிப்பை கொடுத்த தமிழக வீரர் ஷாரூக்கான் மீண்டும் கடும் போட்டிகளுக்கிடையே ரூ.9கோடிக்கு பஞ்சாப் அணி மீண்டும் ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முந்தைய கேப்டன் கே.எல்.ராகுல் லக்னோ அணிக்கு சென்று விட்டதால் தற்போது பஞ்சாப் அணியின் கேப்டனாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த வகையில் தமிழக வீரர் ஷாரூக்கான் பஞ்சாப் அணியின் கேப்டனாக யார் வர வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி பஞ்சாப் அணியில் புதிதாக இணைந்துள்ள இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் தான் கேப்டனாக அணியை வழிநடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் அவருடைய அனுபவம் நிச்சயம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஷாரூக்கான் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.