“விட்டா பொண்ணு கொடுக்க மாட்டாரு போலயே” - ஷஹீன் அப்ரிடியை வறுத்த வருங்கால மாமனார் ஷாகித் அப்ரிடி
டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி குறித்து முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் லீக் போட்டியில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த பாகிஸ்தானின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்தது. இப்போட்டியில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர பவுலர் ஷாஹீன் அப்ரிடி வீசிய 19வது ஓவரில் 3 ஹாட்ரிக் சிக்ஸ் மேத்யூ வேட் அடித்தார் .
இந்த நிலையில் பாகிஸ்தானின் சாமா டிவி சேனலிடம் பேசிய ஷாஹித் அப்ரிடி 19வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஹசன் அலி கேட்சை தவறவிட்டார் என்பது உண்மைதான். ஆனால் இதற்குப் பிறகும் ஷாஹீன் அப்ரிடி புத்திசாலித்தனமாக பந்து வீசியிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் ஷாஹீன் ஒரே மாதிரி பந்துகளை அவருக்கு வீசியது இதற்கு காரணம். ஷாஹீன் வைட் யார்க்கரை வீசியிருக்க வேண்டும், ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி ஷாஹீன் வீசியிருக்க கூடாது. ஷாஹீன் அதி வேகமாக பந்து வீசக் கூடியவர் எனவும் அப்ரிடி கூறியுள்ளார்.
ஷாஹித் அப்ரிடியின் மூத்த மகள் அக்சாவுக்கும் ஷாஹீன் அப்ரிடிக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில் வருங்கால மருமகனை மாமனார் வறுத்தெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.