விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை: சக அதிகாரி கைது
கோவையில் பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த விமானப்படை பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சக அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.
: கோவை ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் விமானப்படை பள்ளி மற்றும் விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆக.15-ம் தேதி நிர்வாகவியல் கல்லூரிக்கு, டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி உட்பட 30 பேர் கொண்ட குழுவினர் தங்கி பயிற்சி பெற வந்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பெண் அதிகாரிக்கு காலில் அடிபட்டுள்ளது. இதற்கான சிகிச்சையோடு, தொடர்ந்து வலி நிவாரண மருந்தும் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்.10-ம் தேதி இரவு பெண் அதிகாரி தனது அறையில் ஓய்வில் இருந்துள்ளார். அப்போது, அவரது அறைக்கு சென்ற அதே குழுவில் பயிற்சி பெற்றுவரும் ஃபிளைட் லெப்டினன்ட் அந்தஸ்தில் உள்ள சத்தீஸ்கர் மாநிலம் டர்க் நகரத்தை சேர்ந்த அமித்தேஷ் ஹார்முக் (29) என்பவர், தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக உயரதிகாரிகளிடம் அந்த பெண் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர்கள் நடத்திய விசாரணையில் திருப்தி இல்லாததால், கடந்த வாரம் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
ஆணையர் உத்தரவின்பேரில், மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, அமித்தேஷ் ஹார்முக் மீது பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து,
நேற்று முன்தினம் மாலை அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்