‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்’ - கொந்தளித்த குஷ்பு
பெண் காவலருக்கு தி.மு.க நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு அளித்த நிலையில், ‘இதுபோன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்களை மூடிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டம்’ என நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார்.
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றசாட்டு எழுந்தது.
இபிஎஸ் கண்டனம்
இது தொடர்பாக, அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது விடியா ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மைக் காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை, உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அண்ணாமலை விமர்சனம்
மேலும் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது, இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்” என கூறினார்.
நடிகை குஷ்பு விமர்சனம்
இந்நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகை குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் “பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இது போன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது” என விமர்சித்துள்ளார்.