மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - 20 ஆண்டுகளாகத் தப்பிய ஆசிரியர் சிக்கிய பின்னணி
தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியர் மீது 23 மாணவிகள் பாலியல் தொந்தரவு புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தான் கணிதமேதை ராமானுஜம் படித்தார். இந்த பள்ளியில் தான் கடந்த கணித ஆசிரியராக சேகர் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
கொரோனா பாதிப்பு குறைந்ததால் கடந்த 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சேகர் தங்களிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக 23 மாணவியர் பள்ளி நிர்வாகத்திடம் அடுத்தடுத்து புகார் அளித்தனர். அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் உறுதியாகியதால் மாவட்ட எஸ்பி ரவளிபிரியாவிடம் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் சேகர் மீது புகார் அளித்தது.
அந்தப் புகாரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதலே சேகர் பள்ளி மாணவியரிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது.
மாணவியரின் தோளில் கை போடுவது, நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது அருகில் வந்து நிற்கும்படி சொல்வது என விதவிதமாக அவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். போக்சோ சட்டம் வருவதற்கு முன்னர், பல முறை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சேகர் மீது பள்ளி நிர்வாகம், பணியிடை நீக்கம், ஊக்கத் தொகை ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர்.
சேகர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோதெல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளூர் பிரமுகர்களை வைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த முறை அதிகளவிலான மாணவியர் ஒன்று சேர்ந்து புகார் அளித்த நிலையில் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர் வெறும் கைது நடவடிக்கையோடு நின்று விடாமல், அவரை நிரந்தரப் பணி நீக்கம் செய்து, அவருக்குரிய பணப் பலன்கள் அத்தனையையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவியரின் பெற்றோர் பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.