ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல - நீதிமன்ற தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து தற்போது விவாதமாகி உள்ளது.
பாலியல் முயற்சி?
உத்தரப்பிரதேசம், கஸ்கஞ் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற 11 வயது சிறுமிக்கு பவன், ஆகாஷ் ஆகியோர் தொல்லை கொடுத்துள்ளனர். சிறுமியை வழிமறித்து, அவர் மீது தவறாக கைவைத்ததுடன், பைஜாமா கயிற்றை அவிழ்த்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக வந்தவர்கள் வந்து கேட்டதில் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். 2021ல் இச்சம்பவம் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி கருத்தால் சர்ச்சை
இவ்வழக்கு விசாரணையில் பேசியுள்ள நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபடுவதற்கு தயாராவதும், பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. மார்பகத்தை பிடிப்பதோ அல்லது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பதோ பாலியல் வன்கொடுமை முயற்சியாக கருத முடியாது.
அதனை பாலியல் அத்துமீறலாக/ தாக்குதலாக தான்கருத முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்வதில் உறுதியாக இருந்ததாக பதிவு செய்யப்பட்ட எந்த ஆதாரமும் உறுதிபடுத்தவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த செயலால் பாதிக்கப்பட்டவர் நிர்வாணமாகிவிட்டார் அல்லது ஆடைகளை அவிழ்த்துவிட்டார் என்று சாட்சிகளால் கூறப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை," என்று உத்தரவிட்டுள்ளார். இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.